அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். நியூயார்க் மைதானத்தில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டி இதுவே ஆகும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரை வீசிய இந்திய அணியின் ஹர்ஸ்தீப் சிங் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அமெரிக்க அணியின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவன் டெய்லர் 30 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 24 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேற, இறுதியாக அமெரிக்க அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில் ஹர்ஸ்தீப் சிங் நான்கு ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது. இந்தப் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி இந்த போட்டியில் நிதானமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா 6 பந்துகளில் மூன்று ரன்கள் குவித்து வெளியேற, ரிசாப் பண்ட் வழக்கம் போல இந்திய அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.20 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 18 ரன்கள் குவித்த நிலையில் பண்ட் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேற, பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் தூபெ ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை கரை சேர்த்தது.
இதையும் படிங்க:யார்க்கர் எல்லாம் இல்லை.. பும்ரா விக்கெட்டுகளை இப்படித்தான் வீழ்த்துகிறார்.. தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஸ்டெயின் பேட்டி
சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரரான சிவம் துபே 35 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் குறித்து இந்திய அணியின் வெற்றி உறுதி செய்தனர். இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியை கனடா அணிக்கு எதிராக ஃப்ளோரிடாவில் விளையாட உள்ளது.

