ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை பரிதாபமாக தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. இந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துடன் முடிக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி பெரிதாக சோபிக்காததால் கேப்டன் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியில் கேப்டன்சி செய்து கொண்டிருந்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான ஹர்திக் பாண்டியாவை திரும்பவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து கேப்டன் பதவியை ஒப்படைத்தது.
ஆனால் அப்படி ஒப்படைக்கப்பட்டதற்கு பிறகு அணியின் சீனியர் வீரர்களுக்கே பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. முக்கியமாக இதில் ரோகித் சர்மாவுக்கு உடன்பாடு இல்லை என்பது தொடரின் போதே தெரிய வந்தது. சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை தேர்வு செய்த பிறகு அது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல கலந்து கொண்ட ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து கேட்டதற்கு “நான் இதுவரை பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன் அது போலத்தான் இதுவும்” என பதில் அளித்தார்.
ஆனால் அதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும், ஹர்திக் பாண்டியா குறித்தும் எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதன் மூலமே அவர் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களிடம் கலந்துரையாடிய போது மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது அதிருப்தி குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்கள் ஒற்றுமையாக வழி நடத்திச் செல்லாததே இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம் என்று ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார் இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் விளையாடியிருக்கிறேன். அந்த அணியின் நிர்வாகம் மிகச் சிறப்பானது. வீரர்களை அவ்வளவு ஒற்றுமையாக வழிநடத்திச் செல்வார்கள். ஆனால் அவர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது அவர்களது முடிவுக்கு எதிர் வினையாக அமைந்து விட்டது.
அவர்கள் எதிர்காலம் குறித்து கருதி இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவு சீனியர் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல தெரியவில்லை. ஒரு பெரிய அணியில் இது போன்ற நடப்பது சகஜம்தான். ஆனால் இப்படி மோசமான தோல்விகளை சந்தித்து இருப்பது எனக்குள் வலியை ஏற்படுத்துகிறது. இன்னும் ஓர் இரு ஆண்டுகள் கழித்து இந்த முடிவை எடுத்திருந்தால் இது சரியான முடிவாக இருக்கலாம்.
இதையும் படிங்க:பிளமிங்கை சம்மதிக்க வைப்பாரா தோனி.? தோனியின் உதவியை நாடும் பிசிசிஐ.. இந்திய அணிக்கு அந்த பொன்னான வாய்ப்பு உருவாகுமா?.
ஆனால் இதில் ஹர்திக் பாண்டியாவின் தவறு என்பது எதுவும் இல்லை. அவர் குஜராத் அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தினார். ஒரு அணியை ஒற்றுமையாக வழிநடத்திச் செல்வது மூத்த வீரர்களின் கடமையாகும். யார் கேப்டனாக இருக்கிறார் என்பதெல்லாம் முக்கியமில்லை. கேப்டன்கள் வருவார்கள், போவார்கள். இந்த விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒற்றுமையாக செயல்படாததே இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம்” என்று கூறி இருக்கிறார்.

