நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதில் டாஸ் வென்று முதலில் சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மூன்று ஓவர்கள் 31 ரன்கள் இருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் தொடங்கப்பட்ட ஆட்டம் ஈரப்பதமான ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழன்று திரும்பியதால் விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் நிதானமாகவே விளையாடினர்.
பத்து ஓவர்களில் 78 ரன்கள் குவித்த நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்தார். 47 ரன்களில் நான்கு சிக்சர்கள் குவித்த நிலையில் விராட் கோலி வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய பட்டிதார் சென்னை அணியின் பந்துவீச்சு அடித்து நொறுக்கினார். 23 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெளியேற மறுமுனையில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் டூ பிளசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
பின்னர் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளின் 38 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் சென்னை அணியை 200 ரன்களுக்குள் நிறுத்த வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.
இதன்படி பேட்டிங் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய மிச்சல் நான்கு ரன்களில் வெளியேற, தொடக்க ஆட்டக்காரர்கள் ரவீந்திர மற்றும் ரகானே ஆகியோர் சிறப்பாக விளையாடி மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் இந்த ஜோடியும் ஆட்டமிழந்து வெளியேற அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி இறுதிக்கட்டத்தில் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடியது. இருப்பினும் கடைசி ஓவரில் சென்னை பிளே ஆப் செல்ல 17 ரன்கள் தேவைப்பட, யஸ் தயாள் வீசிய அந்த ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதால் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியது.
இதையும் படிங்க:ஆறு வருடம் ஆச்சு.. ஆனால் தோனி குறித்து மக்கள் இதையே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. போட்டிக்கு முன்பாக டூப்ளசிஸ் பேச்சு
10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா ராஜஸ்தான், பெங்களூர் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் சகுதி பெற்றுள்ளன.

