1990களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படி அடையாளமாக திகழ்ந்தாரோ அதுபோல 2000களில் 2கே கிட்ஸ்களுக்கு கிரிக்கெட்டின் அடையாளமாக திகழ்பவர் என்றால் விராட் கோலியை குறிப்பிடலாம்.
அந்த அளவிற்கு மனிதர் சச்சின் டெண்டுல்கரை போன்று ஏன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கூட தற்போது அடித்து உடைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விராட் கோலியின் அபார வளர்ச்சிக்கு காரணம் மகேந்திர சிங் தோனிதான் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைகிறார் விராட் கோலி. ஆனால் அதற்கு முன்னர் அண்டர் 19 உலக கோப்பையை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். யார் இந்தப் பையன்? ஆஸ்திரேலிய அணியினரிடம் இருக்கும் ஆக்ரோஷம் அப்படியே இவனுக்கு இருக்கிறதே என்று அனைவரும் வியந்தனர்.
அப்போது 2005ஆம் ஆண்டுக்கு மேல் மகேந்திர சிங் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பேட்டிங் வரிசையில் விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் என ஒரு பெரும் படையே வலுவான பேட்டிங்கால் அணி வகுத்தது. இவர்களை தாண்டி ஒரு புதிய இளம் வீரர் இடம் பிடிப்பது என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
இவரது திறமையை அறிந்த கேப்டன் மகேந்திர சிங் டோனி கோலியை எப்படியாவது இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்தார். இந்தியாவுக்கு சிறிய நாடுகளுக்கு எதிரான போட்டி என்றால் எப்படி முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமோ அதேபோல வீரேந்திர சேவாக் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது விராட் கோலியை 2008ஆம் ஆண்டு மெல்ல அறிமுகம் செய்தார்.
அதற்குப் பிறகு விராட் கோலியின் வளர்ச்சி குறித்து யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆனால் அவரது ஆரம்ப கால சறுக்கலில் மகேந்திர சிங் தோனி அதற்கு பக்கபலமாய் நின்றார் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது அது ஒரு ஸ்டார்ட்- ஸ்டாப் கேரியராக இருந்தது. அதாவது நல்ல வளர்ச்சி, மோசமான வீழ்ச்சி என்ற நிலையிலேயே சென்று கொண்டிருந்தது. அப்போது மகேந்திர சிங் தோனி அவருக்கு கொடுத்த ஒரு கூடுதல் வேகம்தான் இன்று நாம் விராட் கோலி ஆக அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் “என்று கூறி இருக்கிறார்.
சுனில் கவாஸ்கரின் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனது வீழ்ச்சியின் போது மகேந்திர சிங் டோனி தனக்கு பக்கபலமாக இருந்ததால்தான் விராட் கோலி அவர் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார்.

