ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் ஆர்சிபி வீரர் ஸ்வப்னில் சிங் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என ஏற்கனவே மூன்று அணிகள் முன்னேறி விட்ட நிலையில் நான்காவது அணியாக எந்த அணி செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிட்டத்தட்ட மற்ற அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே போதும். ஆனால் பெங்களூர் அணி குறிப்பிட்ட ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சென்னை அணி ஏற்கனவே ஏழு வெற்றிகளை பெற்றுள்ளதால் அந்த அணியின் ரன் ரேட் தற்போது நல்ல நிலையில் உள்ளது.
ஆனால் பெங்களூர் அணி ஆறு வெற்றிகளை மட்டுமே கொண்டிருப்பதால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சூழ்நிலைகளை கையாள்வதில் வல்லவர் என்றும், அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்றும் ஆர்சிபி வீரர் ஸ்வப்னில் சிங் கூறியிருக்கிறார்.
அவர் விளையாடுவது எங்களுக்கு சாதகம்தான் தவிர எங்களுக்கு பிரச்சனை ஏதும் கிடையாது எனவும் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“உண்மையை சொல்ல வேண்டும் என்றால் போட்டியின் போது மஹி பாய் நம் முன்னே இருப்பார். அப்போது சில விஷயங்கள் நமக்கு தோன்றும். எளிமையாக இருக்கிறார் சூழ்நிலைகளை எளிதாக சமாளிக்கிறார் என்று நினைப்போம்.
இதனால் அவர் இருக்கும் போது நமக்கு உத்வேகம் மட்டுமே கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் அழுத்தமாக உணர மாட்டோம். அவருடைய கருத்துக்களை நான் தனிப்பட்ட முறையில் மனதில் வைத்துக் கொள்வேன். இந்த காரணத்தால் எனக்கு அழுத்தம் எதுவும் ஏற்படாது. நடப்பு சீசனைப் பொறுத்தவரை எங்களுக்கு ஏழாவது அல்லது எட்டாவது போட்டியில் இருந்து நாக் அவுட் போட்டிகள்தான் விளையாடி வருகிறோம்.
எனவே இன்று நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியும் எங்களுக்கு சாதாரண ஒன்றுதான். ஆனால் இது சற்று பெரிய போட்டி. எனவே நாங்கள் எதையும் மனதில் எடுத்துக் கொள்ளாமல் வெற்றி பெறுவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறோம். நாங்கள் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அது குறித்து மட்டுமே தற்போது எங்கள் சிந்தனையில் ஓடுகிறது” என்று கூறி இருக்கிறார்.

