இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கேவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கை பொறுத்த வரை அதிகபட்சமாக ரியான் பராக் 35 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 47 ரன்களை குவித்தார். அதற்குப் பின்னர் துருவ் ஜூரேல் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 24 ரன்களும் பட்லர் 21 ரன்களும் குவித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய சிமர்ஜீத் சிங் நான்கு ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்குப் பிறகு துஷார் தேஷ் பாண்டே முப்பது ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். சென்னை அணியினரின் சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவிந்த்ரா மற்றும் ருத்ராஜ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு மூன்று ஓவர்களில் 32 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவிந்த்ரா 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருத்ராஜ் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் சீரான ரன்கள் குவித்து விக்கெட்களை இழந்தார்கள். மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய மிச்சல் 13 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மொயின் அலி 10 ரன்களும் சிவந்துபே 18 ரன்களும் குவிக்க அதற்குப் பிறகு களம் இறங்கிய சமீர் ரிஸ்வி எட்டு பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 15 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மறுமுனையில் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ் 41 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 42 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்றைய போட்டியின் மூலம் தனது ஏழாவது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை அணி அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. அடுத்த போட்டியிடும் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயமாக சென்று விடும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1119 நாட்களுக்குப் பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நீண்ட காலமாக தோல்வியை மட்டுமே பதிவு செய்த சென்னை அணி அந்த ஏக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

