ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பைக்காண இந்திய அணியை அறிவித்தது.
அதில் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் பிரச்சனை உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை அணியில் இருந்திருக்கவே மாட்டார் என்று மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்ததால் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஏற்கனவே இருந்த ரோகித் சர்மாவை இந்த சீசனில் கழட்டி விட்டு குஜராத் அணியில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது.
ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலேயே கேப்டன்சி பணியை தொடர்ந்து இருக்கலாம் என்று இப்போது தோன்றும். அந்த அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் இந்த சீசனில் மோசமாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 12 லீக் போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி தழுவி, நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது.
மேலும் தன்னிடம் இருந்த கேப்டன் பதவியை நீக்கி ஹர்திக் பாண்டியா வசம் ஒப்படைத்ததால் ஹர்திக் பாண்டியாவிற்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையே சிறிய மனக்கசப்பு இருப்பதாக தகவல்களும் வெளியாகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையாக இருக்குமானால் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கவே மாட்டார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மாவிற்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் மனக்கசப்பும் இல்லை என்பது போல் எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அப்படி ஏதாவது பிரச்சனை இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா இந்நேரம் டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக இடம் பெற்றிருக்க மாட்டார். ஏனெனில் இந்திய அணியில் இவர்தான் இடம்பெற வேண்டும், இவர் இடம் பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் முழு உரிமை ரோஹித் சர்மாவுக்கு உண்டு.
தற்போது உலகக்கோப்பை இந்திய அணியை பார்க்கும்போது ரோகித் சர்மா இந்த முறை நிச்சயமாக டி20 உலக கோப்பையை பெறும் உறுதியோடு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர்களை இந்த முறை அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் தேவை இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்பதால் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவை ஆதரிக்கவே விரும்புகிறார்” என்று கிளர்க் கூறியிருக்கிறார்.

