ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தற்போது தாயகம் திரும்ப தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வீரர்கள் மட்டுமில்லாமல் உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இதில் கலந்துகொண்டு விளையாடி வருவார்கள். ஒவ்வொரு வீரர்களையும் ஐபிஎல் அணிகள் அவர்களது திறமைக்கேற்ப ஏலத்தில் எடுக்கும்.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால், உலக நாடுகளின் பார்வை உலகக் கோப்பை மீது திரும்பி உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சி பெரும் விதமாக ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிக்குர் ரகுமான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மதீஸா பத்திரானா மற்றும் தீக்ஷனா ஆகியோர் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் தாயகம் திரும்ப தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஐபில் அணியிலும் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அந்தந்த அணிகளுக்கு முக்கிய வீரர்களாக திகழ்வதால் அவர்களின் இழப்பு பிளே ஆப் சுற்றில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொயின் அலி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேர்ஸ்டோ, ஷாம் கரண், லிவிங்ஸ்டன் ஆகியோரும் கொல்கத்தா அணியில் பில் சால்ட் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் ஆகியோரும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை தாயகம் திரும்ப அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பிளே ஆப் சமயத்தில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பஞ்சாப் அணியின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை.. அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா சோகம்
ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் சென்று பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

