நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாசை இழந்த சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரகானே ஐந்து ரன்களிலேயே ஆட்டமிழந்ததால், சென்னை அணி எட்டு ரன்களுக்கு முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது. இதற்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் ரவீந்திராவுடன் கைகோர்த்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த நிலையில் ரவிந்த்ரா 21 ரன்களில் ஆட்டம் இழக்க, அதற்கு பிறகு துபே உடன் கைகோர்த்து இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ருத்ராஜ் 69 ரன்களும் டூபே 66 ரன்களும் குவித்தனர். இறுதியாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கி நான்கு பந்துகளில் 20 ரன்கள் அதிரடியாக குவித்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாட, மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் விரைவிலேயே விக்கெடுகளை இழந்து வெளியேறினர்.
ரோஹித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 113 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சென்னை அணியின் பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்து வீசுவதற்கு முன்னால் தோனியின் ஆலோசனை தனக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் பவர் பிளேவில் பந்து வீசும் பொழுது மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். அப்போது தோனி பாய் என்னிடம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயல்பாக இரு என்று கூறினார். இது எனக்கு பந்துவீச்சில் பெரிதும் உதவியது. நான் என்னை இயல்பாக அப்படியே வைத்துக் கொண்டேன்.
நான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சில திட்டங்களை வகுப்பேன். என்னுடைய கவனம் முழுவதுமே ரிசல்ட் எப்படி வருகிறது என்பது கிடையாது. என்னுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்துகிறேனா என்பதில் மட்டும்தான் இருக்கும். கடந்த வாரத்தில் சிறிது காயத்தால் அவதிப்பட்டேன். ஒட்டுமொத்த அணியினரின் ஆதரவே இன்று நான் சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்

