நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை அணிக்காக அபாரமாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. விராட் கோலி இந்த முறை மூன்று ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளசிஸ் 61 ரன்கள் குவித்தார். ரஜத் பட்டிதார் 26 பந்துகளில் 50 ரன்கள், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 54 ரன்களும் குவித்தனர்.
இதனால் 20 ஓவர்களில் 196 ரன்கள் பெங்களூர் அணி குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 39 பந்துகளில் 64 ரன்கள், அதற்கு பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும், ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் மூன்று சிக்சர்களைக்குவித்து 21 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் பெங்களூர் அணி தனது ஆறாவது போட்டியில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. இந்தப் போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா கூறும்பொழுது
“இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஐந்து விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்கவில்லை.
இன்றைய முதல் 10 ஓவர்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. கேட்சுகளும் எளிதாக கைக்கு சென்றன. டி20 கிரிக்கெட் பொருத்தவரை பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. நாம் பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் யார்க்கர் மட்டும் பத்தாது. நிறைய வேரியேஷன்கள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் வீடியோக்கள் மூலம் நிறைய விஷயங்கள் ஆராயப்படுகிறது. எனக்கு கடினமான நாட்கள் வரும் பொழுது நான் என் தவறுகளை ஆராய்ந்து அதனை சரி செய்வேன்.
இதையும் படிங்க:என்னப்பா நடக்குது.. ரோகித் சர்மாவின் புது வீடியோவால் மீண்டும் கிளம்பிய சர்ச்சை.. இதுக்கு இல்லையா எண்டு கார்டு
உங்களிடம் இருக்கும் அனைத்து பந்துவீச்சு திறமைகளையும் ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஈகோ என்பது முற்றிலுமாக இருக்கவே கூடாது. நீங்கள் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய நபராக இருந்தாலும் அன்றைய நாளில் ஆடுகளம் மெதுவான பந்துகளுக்கு ஒத்துழைத்தால் நீங்கள் மெதுவான பந்தங்களை வீச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

