இன்று நடைபெற்ற 21 வது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டி காக் இந்த முறை 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். கேஎல் ராகுல் ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதற்கு பிறகு களம் இறங்கிய படிக்கல் இந்த முறையும் ஏழு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு களம் இறங்கிய ஆல் ரவுண்டர் மார்க் ஸ்டாய்னிஸ் அதிரடியாகவும், பொறுமையாகவும் விளையாடி 43 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 58 ரன்கள் குவித்தார். அரை சதம் விலாசிய நிலையில் ஆட்டம் இழந்த இவர் அதற்குப் பிறகு நிக்கோலாஸ் பூரன் 22 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 33 ரன்கள் குவித்தார். கே.எல் ராகுல் 33 ரன்களில் வெளியேற, லக்னோ அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய உமேஸ் யாதவ் மூன்று ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கம் மட்டுமே ஓரளவு சிறப்பாக அமைந்தது. 19 ரன்கள் குவித்த நிலையில் அணியின் கேப்டன் கில் வெளியேறினார். அதற்குப் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாக விளையாடாமல் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க அதற்குப் பிறகு சாய் சுதர்சன் 23 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்தார்.
இறுதியில் ராகுல் டிவேட்டியா மட்டும் போராடிக் கொண்டிருக்க, அவரும் கடைசியாக 25 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 30 ரன்கள் குவித்து வெளியேறினார். இதற்கிடையில் லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில், உடலில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.
அவர் போனாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். அதில் குறிப்பாக இளம்வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தாக்கூர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்திருக்கிறது. இறுதியாக குஜராத் அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதையும் படிங்க:இவருக்கும் டெல்லி அணிக்கும்தான் போட்டியே.. இந்த வெற்றி சும்மா வரல- வெற்றிக்கு பின் பாண்டியா பேட்டி
இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தில் பிடித்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி பெற்று நான்காவது இடத்தில் தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிவரும் அடுத்த போட்டிகளில் கவனமாக விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

