நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தோல்வியை அடைந்ததைத் தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் காட்டமான விமர்சனத்தைத் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்ததாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அந்த அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்கி 16 வருடங்கள் ஆகியும் இன்னமும் ஒரு முறை கூட பெங்களூரு அணியால் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
முன்னணி ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், வெட்டோரி இவர்கள் தலைமையிலும் பெங்களூரு அணி விளையாடி இருக்கிறது. மேலும் ஏ பி டிவில்லியர்ஸ், கிரிஸ் கெயில், விராட் கோலி, மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடிக் கொண்டும் விளையாடியும் இருக்கின்றனர். இருப்பினும் அந்த அணி ஒரு கோப்பையை வெல்ல தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பாக பெண்கள் ஆர்சி அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. அதேபோல ஆண்கள் அணியும் சாம்பியன் கோப்பையை வென்று அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இது ஆர்சிபி ரசிகர்களுக்கு தற்போது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வரும் பெங்களூர் அணியை கலைத்து விடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஆர்சிபி அணியை பற்றி பேசுவது பயனுள்ளதாக இருக்காது என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் கிடையாது.
விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்கள் அணியில் கிடையாது. விராட் கோலி மட்டுமே அந்த அணியில் தொடர்ந்து மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு வீரராக அவரால் அணியில் வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. 17 வருடங்களாக ஆர்சிபி அணியின் கதை ஒன்றுதான். அதற்கு விடையே கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:MI vs DC.. 20000 டிக்கெடுகள் இலவசம்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ்
இந்த சீசனில் பார்மின் உச்சத்தில் இருக்கும் விராட் கோலி 5 போட்டிகளில் விளையாடி 316 ரன்கள் குவித்து இருக்கிறார். இதற்குப் பின் பெங்களூர் அணியில் அதிகமாக ரன் குவித்ததில் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் 5 போட்டிகளில் விளையாடி 109 ரன்களைக் குவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் ஏமாற்றத்தையே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

