ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதன்படி இன்னிங்ஸை ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் தொடங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரை போல்ட் வீச தனது முதல் பந்தினை எதிர்கொண்ட ரோகித் சர்மா சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய நமன் திர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். முதல் ஓவரிலேயே இரண்டு பந்துகளுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் போல்ட். பின்னர் இசான் கிசான் ஒரு முனையில் விளையாட, மூன்றாவது ஓவரில் திரும்பவும் வீச வந்தார் போல்ட். அப்போது களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் பிரெவிஸையும் முதல் பந்திலயே வெளியேற்றினார். அதாவது மும்பை அணியின் மூன்று வீரர்கள் தங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய திலக் வர்மா ஒரு முனையில் நிதானமாக விளையாட, இஷான் கிஷான் பதினாறு ரன்களில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் சிறிது நேரம் களத்தில் இருந்து ஆறுதல் அளித்தனர். பின்னர் கேப்டன் பாண்டியா 34 ரன்களிலும், திலக் வர்மா 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க, அதன் பிறகு மும்பை அணியின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணித்தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். அதன் பிறகு 126 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. குறைவான இலக்கு என்பதால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே விளையாடினர். இருப்பினும் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் 48 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டைகளை வீழ்த்தினர். மூன்று முக்கிய விக்கெட்டுகளான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், பட்லர் 13 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்களிலும் வீழ்ந்தனர்.
பின்னர் ரியான் பராக்குடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ரியான் பராக் இந்த முறையும் நிதானமாக விளையாடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் தவறவில்லை. மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்களில் ஆட்டம் இழக்க. அதிரடியாக விளையாடிய பராக் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என்று விளாசி 53 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க:வீடியோ: மணலை வைத்து கேப்டன்சி.. ருத்ராஜ் தல தோனியை மிஞ்சிடுவார் போலயே.. ரசிகர்கள் ஆச்சரியம்
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவித்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. மூன்று தோல்விகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

