ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது.
மும்பையின் சொந்த மைதானமான வான்கடேவில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எதிர்கொள்கின்றன. ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியாவிடம் மும்பை அணி நிர்வாகம் கேப்டன்சியை ஒப்படைத்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதை மும்பை அணி ஏற்றுக் கொண்ட நிலையில், ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவாக மும்பை அணி எங்கெல்லாம் சென்று போட்டியில் கலந்து கொள்கிறதோ அங்கெல்லாம் பாண்டியாவின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக கூச்சல்களை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர். இது குஜராத் அணிக்கு எதிரான அகமதாபாத் ஸ்டேடியத்திலும், ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் நடைபெற்றது.
ஆனால் இதனை ஹர்திக் பாண்டியா பெரிதும் கண்டு கொள்ளாதது போல் இருந்தார். இருப்பினும் இந்த இரு போட்டிகளும் மும்பை அணி தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. வெளி மாநிலங்களிலேயே பாண்டியாவுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், சொந்த மைதானத்திலும் அவ்வாறு நடந்தால் அது அணிக்கு நல்லதல்ல என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கருதுகிறது.
மும்பை மைதானத்தில் அவ்வாறு ஏதாவது நடந்தால் இதற்கு ஒரே வழி ரோஹித் சர்மா தலையிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஸ்மித்தை ரசிகர்கள் கத்தியது நினைவிருக்கலாம். அப்போது விராட் கோலி தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்துவார்.
அதற்கு ரசிகர்களும் அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதற்குப் பின்னர் அமைதியாகி விடுவார்கள். ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியின் செய்கைக்கு நன்றி தெரிவிப்பார். அதேபோல இன்று நடைபெறும் போட்டியிலும் அவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் இதற்கு தீர்வு காண ரோகித் சர்மாவால் மட்டுமே முடியும்.
இதையும் படிங்க:தோனி விளையாடிய அந்த ஒரு ஷாட்.. மனுஷன் வேற மாதிரி ஃபார்ம்ல இருக்காரு.. தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர்
மேலும் ரோகித் சர்மாவும் மும்பை அணிக்காக ஐந்து பட்டங்களை வென்று கொடுத்துள்ளார் என்பதால் அவர் மீது ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அன்பினை வைத்துள்ளனர். இதற்கு ஹர்திக் பாண்டியாவும் இனிவரும் போட்டிகளில் வென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம். அப்போது மட்டுமே இவருக்கு எதிரான கூக்குரல்கள் மாறும்

