பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடி இறுதிக்கட்டத்தில் அணிக்கு கணிசமான ரன்களைச் சேர்க்கிறார். இதனால் வருகிற டி20 உலக கோப்பையில் அவர் இடம் பெறுவது குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது 38 வயதான தினேஷ் கார்த்திக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 38 ரன்கள் குவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 10 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என்று 28 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் தினேஷ் கார்த்திக் தற்போது மிகச் சிறந்த பார்மில் இருப்பதாக தெரிகிறது. எனவே இவரை வருகிற டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்தால் பினிஷிங் ரோலில் நல்ல அனுபவ வீரர் கிடைப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை 5.50 கோடிக்கு வாங்கியது. அந்த சீசனில் பதினாறு போட்டிகளில் விளையாடி 330 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங் சராசரி 55 இவரின் ஸ்ட்ரைக் ரேட் 183.33 அப்போது சிறந்த பார்மில் இவரை 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்தது.
டி20 உலக கோப்பையில் பங்கு பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 இன்னிங்ஸ்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் அறையறுதியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் அணியில் களமிறங்கினார். ஆனால் அப்போதும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இருந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இவரை உலக கோப்பையில் தேர்வு செய்வது குறித்து பேச்சுக்கள் எழும் நிலையில், தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது உலகக்கோப்பை ஆண்டு” என்று ரசிகர்களின் மீம்ஸ்களை பார்ப்பதாக சிரித்தபடி அவரது புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். அதாவது கடந்த உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
அதனால் தற்போது இந்திய அணியில் இடம்பெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது போல கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினால் இந்திய அணி இவரது தேர்வு குறித்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

