ஐபிஎல் சீசன் தற்போது இந்தியாவில் தொடங்கி வெற்றிகரமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி விராட் கோலியின் அபார ஆட்டத்தினால் இலக்கை நெருங்கியும், கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியால் வெற்றியும் பெற்றது.
விராட் கோலி இந்த போட்டியில் அதிகபட்சமாக 77 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது மைதானத்தில் இருந்து திடீரென உள்ளே குதித்த ரசிகர் நேராக ஓடிச் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார்.
பின்னர் அவரை எழுப்பிய விராட் கோலி அவரை கட்டியணைத்தபின் மைதானத்தின் பாதுகாவலர்கள் ஓடிவந்து அந்த ரசிகரை வெளியே அழைத்துச் சென்றனர். இதில் விராட் கோலி நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர். அப்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகியது.
ஆனால் அந்த ரசிகர் விராட் கோலியை சந்தித்த பிறகு அவருக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. விராட் கோலியின் காலில் விழுந்ததால் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்ட ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அந்த ரசிகர் பாதுகாவலர் அடித்ததில் வலி தாங்க முடியாமல் கதறி அழுகிறார்.
அப்போது அங்கே இருந்த மற்றொரு பாதுகாவலர் போதும் அடிக்க வேண்டாம் என்று நிறுத்தி அந்த ரசிகரை வெளியே இழுத்துச் செல்கிறார். விராட் கோலியின் ரசிகரை பாதுகாவலர் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தனக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க ஒரு ரசிகன் பல மைல் தூரத்தில் இருந்து வருகிறான்.
அந்தப் போட்டியை காண தனது பணம், நேரம் எல்லாவற்றையும் செலவு செய்து மைதானத்திற்கு வருகிறான். ஆர்வம் மிகுதியில் விளையாட்டு களத்திற்குள் நுழைவது தவறுதான். இருப்பினும் இந்தளவிற்கு தாக்கும் உரிமையை அந்த பாதுகாவலர்களுக்கு யார் கொடுத்தது? அவனும் மனித உயிர் தானே. இவ்வளவு கடுமையாக தாக்கும் அளவிற்கு என்ன தவறு செய்து விட்டான் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இவ்வாறுதான் சம்பவங்கள் நிகழும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 27, 2024

