17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஐந்தாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை அணியின் தோல்விக்கு காரணம் சில கேப்டன்சி குறைபாடுகள் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. பின்னர் 169 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏன் முன்னரே களமிறங்கவில்லை என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஏழாவதாக களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்து வந்தார்.
2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தனது பொறுப்பை உணர்ந்து பேட்டிங் வரிசையில் நான்காக களமிறங்கி ரன்கள் குவித்து வந்தார். அதிரடியாகவும் அதே சமயத்தில் பந்துகளை தெளிவாக எதிர்கொண்டும் அரை சதங்களை குவித்த இவர் அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்று தர உதவினார்.
பின்னர் 2023ஆம் ஆண்டும் குஜராத் அணிக்காக அதே வரிசையில் களமிறங்கி சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இவர் நான்காவது இடத்தில் களமிறங்கியே அதிக ரன்கள் குவித்திருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது மட்டும் ஏழாவது இடத்தில் களமிறங்கினார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து கணுக்காலில் காயம் அடைந்து தற்போது ஓய்வு எடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறுகையில்
“இடது வலது கை ஆட்டக்காரர் கலவை குறித்து எனக்கு புரியவில்லை. ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் விளையாடியது போல முன்னரே பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். பொறுப்பை ஏற்று நீங்கள் முன்னே அணியை வழிநடத்திச் சென்று இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது பேட்டிங் சரியாக தெரியாத ஒரு பந்துவீச்சாளர் போல் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
கடந்த உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது சமி வரும் டி20 உலக கோப்பையைக் கருத்தில் கொண்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இவர் ஐபிஎல் இல் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

