சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியன் பிரீமியர் லீக் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் நுழைந்தவர்.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் என்றாலே மகேந்திர சிங் தோனியின் முதல் தேர்வு சுழற் பந்துவீச்சு தான். இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டு ஆடுகளங்களிலும் சுழற்பந்துவீச்சை வைத்து சில மாயாஜால வித்தைகளை நிகழ்த்துவார். இந்நிலையில் இளம் வீரராக அறிமுகமான அஸ்வின் பந்துவீச்சு பிடித்துப் போக 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் முக்கிய வீரராக மாறினார்.
அதுவும் சென்னை ஆடுகளங்கள் என்றாலே, அஸ்வின் பந்துவீச்சு வேற லெவலில் இருக்கும். அந்த அளவிற்கு தோனியின் நம்பிக்கை வீரராகவே மாறிப் போனார். இடையில் சூதாட்டப் புகாரில் சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடைபட, அப்போது புனே அணிக்காக மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து விளையாடினார். அதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்த அவர், 2018ஆம் ஆண்டு சென்னை அணி திரும்ப ஐபிஎல் நுழைந்தது.
அப்போது சில பிரச்சனைகளின் காரணமாக அஸ்வினை சென்னை அணியால் திரும்ப வாங்க முடியவில்லை. அப்போது அவரை பஞ்சாப் அணி வாங்கி கேப்டனாக நியமித்தது. இரு ஆண்டுகள் பஞ்சாப் அணியில் விளையாடிய அஸ்வின் அதன் பிறகு டெல்லி அணிக்கு வாங்கப்பட்டார். தற்போது டெல்லி அணியில் இருந்து ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் அஸ்வினுக்கு, சமீபத்தில் தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் விருது கொடுக்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காகவும், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதற்காகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி பரிசாகவும் வழங்கப்பட்டது. அப்போது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய அஸ்வின், சிஎஸ்கேவில் இடம் பெற்றது குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது
“நான் இந்த நிகழ்ச்சியில் ஒரு நிகழ்வை சொல்லாவிட்டால் இன்று இரவு என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. நான் 2008ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் அணியை எதிர்த்து ஜாலி ரோவர் அணிக்காக விளையாடினேன். அந்தப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அன்று இரவு நடந்த பார்ட்டியில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் என்னிடம் அஸ்வின், “நீங்கள் சிறப்பாக பந்து வீசுகிறீர்கள் நீங்கள் முத்தையா முரளிதரன் இடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அப்போது நான் சிஎஸ்கே அணியில் இடம் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தேன். அப்போது உள்நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் முடியாது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் சட்டென சிஎஸ்கே சிஇஓ தலைவர் காசியிடம், நீங்கள் அஸ்வினை சிஎஸ்கே அணியில் சேர்க்கவில்லையா? என்று கேட்டார். அந்த வரிகள் தான் நான் சிஎஸ்கே அணியில் இணைவதற்கு முக்கிய காரணம்.அடுத்த நாளே சிஎஸ்கே நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தத்தைப் பெற்றேன் என்று கூறினார்.

