மகேந்திர சிங் தோனி ஏன் கேப்டனாக சென்னை அணிக்கு இவ்வளவு காலம் நீடித்து வருகிறார் என்று யோசித்தால், சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்த வீரர்களின் பட்டியலையும், தோனியின் செயல்பாட்டையும் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் என முதன் முதலில் ஒரு அணி உருவான போதே கேப்டனாக பொறுப்பேற்றவர் மகேந்திர சிங் தோனி. அதுவே சென்னை அணியின் முழு அடையாளமாக மாறியது. 2008 ஆம் ஆண்டு சென்னை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த போதே, அவர் சிஎஸ்கே ரசிகர்களின் அன்புக்கு உரித்தானவராக மாறிவிட்டார்.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூன்று பேர் கேப்டனாக இருந்துள்ளனர். அது மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பில்டிங் என மூன்றிலும் கலக்கக்கூடிய இருவருக்கு கேப்டன்சி அவ்வளவாக ஒத்துவரவில்லை. இவர்கள் 10 போட்டிகளுக்கு கூட கேட்டனாக செயல்பட்டதில்லை என்பதுதான் சோகம்.
2008ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கேப்டனாகவே தோனி இருந்துள்ளார். இதற்கு இடையில் தோனி எடுத்த சில போட்டிகளின் ஓய்வினால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். இதுவரை ஆறு போட்டியில் கேப்டனாக இருந்துள்ள சுரேஷ் ரெய்னா இரண்டு வெற்றிகள், மூன்று தோல்விகள், ஒரு டை என சராசரியாகவே இருந்துள்ளார்.
இவருக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி ஒரு மாறுதல் வேண்டும் என்று நினைத்து ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தார். அந்தத் தொடரின் முதல் 8 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா, அதில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று தர முடிந்தது. ஆறு போட்டிகளில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் மகேந்திர சிங் தோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.
2023ஆம் ஆண்டிலும் கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி அந்த சீசனில் சென்னை அணிக்கு பட்டத்தையும் வென்று கொடுத்தார். இதுவரை சென்னை அணிக்காக 235 போட்டிகள் கேப்டனாக செயல்பட்டு உள்ள தோனி அதில் 142 வெற்றிகள், 90 தோல்விகள், ஒரு டை என கிடைத்துள்ளது. தோனியின் வெற்றி சராசரி 60.42 ஆகும். இதற்கு அடுத்து கேப்டனாக செயல்பட்ட சுரேஷ் ரெய்னாவின் வெற்றி சராசரி 33.33ஆகும். ரவீந்திர ஜடேஜாவின் வெற்றி சராசரி 25 ஆகும்.
தற்போது 42 வயதாக மகேந்திர சிங் தோனி, இந்த தொடரிலும் கேப்டன் ஆகவே செயல்பட போகிறாரா? என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் கிடைத்த கேப்டன்சி வாய்ப்பை இவர்கள் இருவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர் என்பதாலேயே தோனியும் தொடர்ந்து கேப்டனாகவே நீடித்து வந்திருக்கிறார். தோனியால் இன்னும் எத்தனை வருடங்கள் கேப்டனாக செயல்பட முடியும் என்று தெரியவில்லை. கேப்டன்சியை விட விக்கெட் கீப்பிங் பணி மிகவும் சிரமம் என்பதால் அவரும் கூடிய விரைவிலேயே ஓய்வு பெற்று விடுவார். எனவே இந்த ஆண்டிலாவது சரியான மாற்றுக் கேப்டனை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவசியம்.

