ஐபிஎல் 2024 சீசன் மிக விரைவில் தொடங்க உள்ளது. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளும் 10 அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸ்ஷிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதற்காக பெங்களூர் அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை அணி வீரர்கள் சென்னை முகாமில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அணியின் தலைவர் கேப்டன் எம் எஸ் தோனி பத்து நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்து அணியுடன் இணைந்து விட்டார்.
இரு அணிகளையும் ஒப்பிடுகையில் மிக வலுவாகவேக் காணப்படுகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை அதன் பிரதானமே பேட்டிங்கும் சுழற்பந்து வீச்சும்தான். தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பத்தி ராயுடுவின் இடத்தை பூர்த்தி செய்ய, இந்திய உள்ளூர் போட்டிகளில் கலக்கி வரும் சமீர் ரிஸ்வி அவரது இடத்தை பூர்த்தி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் பந்துவீச்சிலும் முக்கியப் பங்காற்றுவார். சென்னை அணியின் ஆல்ரவுண்டரை பொறுத்தவரை ஜடேஜா அந்த அணியின் முக்கியப் பிளேயராக விளங்குகிறார்.
மேலும் சமீபத்தில் கொல்கத்தா அணியில் இருந்து வாங்கப்பட்ட சர்த்துல் தாகூர் ஆல்ரவுன்டர் வரிசையில் பலம் சேர்க்கிறார். முன்பு சென்னை அணிக்காக விளையாடிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். தற்போது மீண்டும் சென்னை அணிக்கே களமிறங்கப் போகிறார். இந்நிலையில் சிஎஸ்கே குறித்தும் தோனி குறித்தும் பேசிய சர்துல் தாகூர்
“மீண்டும் சென்னை அணிக்காக களம் இறங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையை சொல்லனும்னா கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு சற்று கடினமாக இருந்தது. தற்போது கேப்டன் தோனி தலைமையில் விளையாட மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர் ஸ்டம்புக்கு பின்னால் அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துவார். வீரர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதில் தோனியின் பங்கு மிகப்பெரியது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். கிரிக்கெட்டில் நாம் வளர்வதற்கு பெரிதும் உதவுவார்” என்று கூறி இருக்கிறார்.
சமீபத்தில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிய தாகூர் அரையிறுதி போட்டியில் இவரது அபார சதத்தால் தமிழ்நாடு அணியை வெளியேற்றினார். மீண்டும் விதர்பா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் அரை சதம் அடித்து அணியையும் காப்பாற்றி இருக்கிறார். எனவே சென்னை அணிக்காகவும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

