இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதன் தொடக்கப் போட்டிக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் கியாரா அத்வானி ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதன் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன.
இதன் இரு அணி ரசிகர்களும் இப்போட்டியைக் காண தயாராகி வருகின்றனர். அதாவது இரு அணிகளுக்கும் அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால், எந்த அணி ஜெயிக்கும் என்ற விவாதத்தை இப்போதே தொடங்கி உள்ளனர். உலகில் வேறு எத்தனையோ பிரிமியர் லீக் கிரிக்கெட்டுகள் நடத்தப்பட்டாலும், ஐபிஎல்க்கு என ஒரு தனி மரியாதை எப்போதும் உண்டு. அதிலும் சென்னையில் நடைபெறும் போட்டிகள் என்றால் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு காளிப்பார்கள்.
அதனால்தான் 16 சீசன்கள் நடைபெற்று முடிந்து தற்போது 17வது சீசன் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனிலும், மைதானத்திலும் ரசிகர்கள் வாங்கிச் சென்றனர். சென்ற முறை மைதானத்தில் டிக்கெட் வாங்கக் காத்திருந்த ரசிகர்கள் நீண்ட நேரம் ஆகியும் டிக்கெட்டுகள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அது மட்டுமல்லாமல் மைதானத்தில் மொத்தமாக டிக்கெட்டுகள் வாங்கி பிளாக்கில் விற்பனை செய்யும் முறையும் நடைபெற்று வந்ததால், அதனை களையும் பொருட்டு சென்னை அணி நிர்வாகம் தற்போது ஒரு முடிவு செய்துள்ளது.
அதாவது சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் மைதானத்திற்கு சென்று டிக்கெட்டுகளை வாங்காமல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் விற்பனைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று ஏமாற்றம் அடையாமல் ஆன்லைனிலேயே டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் சென்னை அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. எனவே மகேந்திர சிங் தோனி களம் இறங்கும் முதல் போட்டியைக் காண சென்னை ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

