இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடிகை சம்ரீன் கவுருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்களை இருவரும் நவம்பர் 11-ம் தேதி தங்களது Instagram பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
இதில் அர்ஷ்தீப் சிங் தனது காதலியிடம் முழங்காலிட்டு மோதிரம் கொடுத்து காதலை வெளிப்படுத்திய தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களுடன், இருவரும் இணைந்து வாழ்நாள் முழுவதும் பயணிக்கப் போவதாக மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அர்ஷ்தீப் – சம்ரீன் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக IPL 2026 தொடரின்போது, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக சம்ரீன் மைதானத்திற்கு வந்திருந்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாகப் பயணம் செய்த புகைப்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. கடந்த ஜூலை மாதம் அர்ஷ்தீப் தனது Instagram பக்கத்தில் சம்ரீனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கவனம் ஈர்த்த நிச்சயதார்த்த மோதிரம்
இந்த நிச்சயதார்த்தத்தில் சம்ரீனுக்கு அர்ஷ்தீப் வழங்கிய மோதிரமும் தற்போது பேசப்படுகிறது. பிரபல நகை நிபுணர் பியூஷ் கோயல், இந்த மோதிரத்தின் மதிப்பு குறித்த விவரங்களை Instagram-ல் பகிர்ந்துள்ளார். Tiffany நிறுவனத்தின் பிளாட்டினம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்ட இந்த மோதிரம், வட்ட வடிவில் பட்டை தீட்டப்பட்ட வைரத்தைக் கொண்ட Solitaire வகையைச் சேர்ந்தது.
அமெரிக்காவில் இதே வகையைச் சேர்ந்த 6-ம் அளவிலான மோதிரத்தின் விலை 59,000 டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.55.26 லட்சம் ஆகும். இந்தியாவில் வைரத்தின் அளவைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. 1.69 கேரட் மோதிரம் ரூ.44 லட்சத்துக்கும், 2.10 கேரட் மோதிரம் ரூ.66.79 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுவதாக Tiffany நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அர்ஷ்தீப் வாங்கிய குறிப்பிட்ட மோதிரத்தின் உண்மையான விலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. நகை நிபுணர் வெளியிட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த விலை விவரங்கள் வெளியாகியுள்ளன.

