இது சர்வாதிகாரம்.. தண்ணி தூக்க வச்சி வாய்ப்பு தரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்க – வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு, முதல் மூன்று போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரரின் காத்திருப்பு தொடர்கிறது. இந்தத் தேர்வு முடிவு குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகத்தின் அணுகுமுறையை விமர்சித்துள்ள ஓஜா, இளம் வீரர்களை நீண்ட நேரம் மாற்று வீரர்களாக அமர வைத்திருப்பதால் அவர்களின் திறமை வளராது என்று தெரிவித்துள்ளார். போட்டிகளில் விளையாடுவதன் மூலமே ஒரு வீரர் அனுபவத்தையும் பக்குவத்தையும் பெற முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

இது சர்வாதிகாரம் என விமர்சித்த பயிற்சியாளர்

இதுகுறித்து பேசிய மணீஷ் ஓஜா, “தற்போதைய இந்திய அணி நிர்வாகம், வீரர்களை மாற்று வீரர்களாக அமர வைத்தே அவர்களை உருவாக்கிவிடலாம் என்று நினைக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைத் தயார்படுத்த வேண்டும் என்றால், அவர்களைப் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். பெஞ்சில் அமர்ந்துகொண்டே எந்த வீரரும் உருவாகியதில்லை; இனியும் அப்படி உருவாகப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ஒரு இளம் வீரரின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். “இந்தச் சிறுவனுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டார்களா என்று தோன்றுகிறது. தொடர்ந்து வெளியே அமர்ந்திருந்தால், அணிக்கு நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற எண்ணம் வீரருக்கு ஏற்படும். அதனால் அவர் மனதளவில் சோர்வடையக்கூடும்” என்றும் கூறியுள்ளார்.

வைபவ் தற்போது மைதானத்திற்கு வெளியே அமர்ந்து மற்ற வீரர்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய பயிற்சியாளர், இளம் வீரர்களை இவ்வாறு நடத்துவது சரியல்ல என்று விமர்சித்துள்ளார். “எனக்குத் தெரிந்தவரை, இப்போது இருக்கும் அணி நிர்வாகம் ஒரு சர்வாதிகாரம் போலச் செயல்படுகிறது. அவர்களுக்குத் தோன்றுவதைத்தான் செய்கிறார்கள்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

- Advertisement -

வைபவ் மீது பயிற்சியாளருக்கு இருக்கும் நம்பிக்கை

அதேநேரத்தில், வைபவின் திறமை மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் ஓஜா தெரிவித்துள்ளார். இந்தச் சிறுவன் ஒரு புயலைப் போன்றவன் என்றும், இன்று இல்லாவிட்டாலும் நாளை தனது திறமையை நிரூபிப்பான் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆறு மாதங்கள் அல்லது ஓரிரு ஐபிஎல் சீசன்களுடன் வைபவின் வளர்ச்சி முடிந்துவிடாது; இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரது ஆட்டம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி கடந்த ஜூலை மாதம் சர்வதேச T20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 8 போட்டிகளில் 246 ரன்கள் எடுத்துள்ள அவர், 186 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். ஆனாலும், இந்திய அணிக்காக விளையாடிய 19 போட்டிகளில் 11 முறை அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles