இந்திய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் இருக்கும் போது அவர்களின் ஜெர்சியின் பின்புறம், தோள்பட்டைகளுக்கு நடுவில் சிறிய கருப்பு நிற கருவி இருப்பதை சிலர் கவனித்திருக்கலாம். விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களின் உடையிலும் இது காணப்படுகிறது.
இது அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருள் கிடையாது. வீரர்களின் உடல் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி இது. பொதுவாக உடலுடன் ஒட்டியிருக்கும் சிறப்பு பயிற்சி உடையின் பின்புறத்தில் உள்ள சிறிய பையில் இந்த கருவி வைக்கப்படுகிறது.
ஒரு வீரர் பயிற்சி அல்லது போட்டியின் போது எவ்வளவு தூரம் ஓடுகிறார், எந்த வேகத்தில் ஓடுகிறார், ஓட்டத்தின் வேகம் எவ்வளவு விரைவாக அதிகரிக்கிறது போன்ற தகவல்களை இந்த கருவி பதிவு செய்யும். இதன் மூலம் வீரரின் உடல் உழைப்பு அளவையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மேலும், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு வீரருக்கு பயிற்சியின் போது எவ்வளவு உடல் சுமை ஏற்பட்டுள்ளது என்பதை அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உடல்தகுதி நிபுணர்கள் புரிந்துகொள்ள முடியும்.
வீரர்களின் உடல்தகுதியை நிர்வகிக்க உதவும் கருவி
சேகரிக்கப்படும் தகவல்களை வைத்து வீரர்களின் பயிற்சி அளவை தேவைக்கேற்ப மாற்ற முடியும். அதிக உடல் சுமை ஏற்பட்டுள்ள வீரருக்கு ஓய்வு அல்லது குறைந்த அளவிலான பயிற்சி வழங்குவது போன்ற முடிவுகளுக்கும் இந்த தரவுகள் உதவுகின்றன.
இதுபோன்ற கருவிகள் காயம் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், வீரர்களின் உடல்தகுதியை சிறப்பாக பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. படங்களில் காணப்படும் கருவி STATSports போன்ற நிறுவனங்கள் வழங்கும் வீரர் செயல்திறன் கண்காணிப்பு கருவி வகையைச் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
களத்தில் இருந்து பார்க்கும்போது இது ஒரு சிறிய கருவியாக மட்டுமே தெரிந்தாலும், வீரர்களின் உடல் உழைப்பு, பயிற்சி அளவு மற்றும் உடல்தகுதியை தொடர்ந்து கண்காணிப்பதில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது. நவீன கிரிக்கெட்டில் தொழில்நுட்பம் வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டில் எவ்வளவு முக்கியமாகிவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

