வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 351 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 92 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 162 ரன்களும் விளாசியதால் இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்திய பவுலர்களால் அந்த ஸ்கோரையே பாதுகாக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 352/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். 351 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் போட்டியை வெல்ல முடியாதது, அணியின் பவுலிங் பிரிவில் இருக்கும் பிரச்சனையை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
இந்த தோல்வியை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இந்திய வீரர் அனுமா விகாரி, “இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமாரை மீண்டும் கொண்டு வர வேண்டும். அவர் இன்னும் நாட்டின் சிறந்த பவுலர்களில் ஒருவர். ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ராவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. 350 ரன்களை எடுத்தும் நம்மால் காப்பாற்ற முடியவில்லை என்றால், இது ஒரு விழிப்பூட்டும் எச்சரிக்கை. வெஸ்ட் இண்டீஸ் நமது பவுலிங் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எனவே புவனேஸ்வர் குமார், முகமது ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

