ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். ஆனால் அவரது தேர்வு தற்போது உடற்தகுதியை பொறுத்தது என்பதால், முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதுகுறித்து கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வரும் ஒரு வீரர், மீண்டும் போட்டிக்குத் தயாராக இருப்பதை நிரூபிக்காமல் நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாமா என்பதே அவரது கேள்வியாக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது வாஷிங்டன் சுந்தருக்கு தொடை தசை காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் போட்டிகளில் விளையாடாமல் உடற்தகுதியை மீட்டெடுத்து வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், சமீபத்திய வெள்ளைப்பந்து போட்டிகளில் அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நல்ல வீரர்தான். ஆனால் போட்டிகளில் விளையாடாமல் இரண்டு வாரங்களில் எப்படி முழு உடற்தகுதியுடன் வந்துவிட்டார்? இந்திய அணிக்குத் தேர்வாகும் முன்பு ஏதாவது ஒரு மட்டத்தில் போட்டிகளில் விளையாடி தனது மேட்ச் ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டும். டாக்டரின் சர்டிபிகேட்டை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறப்பாக மாறிய அவர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனது ரிதத்தை இழந்துவிட்டார்” என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

