இந்திய அணி முன்னாள் வீரர் மோகித் சர்மா பாகிஸ்தான் அணி எதிர்காலத்திலும் சிறப்பாக மாறுவதற்கான நம்பிக்கை தனக்கு இல்லை என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் வீரர்களும் முன்னாள் வீரர்களும் எப்பொழுதும் கடந்த காலத்தில் இந்திய அணியை என்ன செய்தோம் என்பது குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால், அவர்களால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த அணியாக உருவாவதற்கான எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் அணியின் மேல் வைத்தார்கள். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் வீரர் சதாப்கான் ” நாங்கள் உலகக் கோப்பையில் இந்திய அணியை ஒருமுறை தோற்கடித்திருக்கிறோம்; ஆனால் எங்களுடைய முன்னாள் வீரர்கள் ஒரு முறை கூட இதை செய்ததில்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார். இது தற்போது பெரிய பிரச்சினையாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்திருக்கிறது.
இதுகுறித்து மோகித் சர்மா பேசும்பொழுது ” பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை வெல்வது மற்றும் தோற்கடிப்பது குறித்து பேசவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் இந்திய அணிக்கு எதிராக என்ன நடந்தது என்பது பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அணி வெல்ல வேண்டுமென்றால் எதிரணியை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும். தாங்கள் எப்படி அடுத்து முன்னேற வேண்டும் என்பது குறித்து பேச வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி எதையும் செய்யாமல் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் மேலும் முன்னேறி எதிர்காலத்தில் செல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.

