நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் முதல் சுற்றில் ஜிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது சுற்று முன்னேற முடியாமல் முதல் முறையாக வெளியேறியிருக்கிறது. இதுவரையிலான கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வந்த அணியாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் முதல் சுற்று உடன் வெளியேறி இருப்பது அவர்களைத் தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணி தங்களது கடைசி போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஒமான் அணியை பதினாறு ஓவர்களில் மடக்கி இலக்கை 10 ஓவர்களுக்குள் எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவுக்கு பின்னால் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் தங்களது அடி இன்னும் சிறப்பானதாக இருப்பதாகவே தான் உணர்வதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நாங்கள் எல்லா போட்டிகளையும் இலங்கையில் விளையாடினோம். இங்கு கொழும்பு மைதானத்தின் ஆடுகளம் மெதுவாக இருப்பது எங்களுக்கு தெரியும். நாங்களும் அதற்கு தயாராகவேதான் இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி விஷயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை. நாங்கள் உலககோப்பை தொடரை விட்டு வெளியேறி விட்டோம். ஆனாலும் எங்கள் அணி எல்லாவற்றையும் செய்ய முடிந்த அணியாகவே நான் இன்னும் உணர்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில் நாங்கள் இன்னும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கக்கூடிய ஒரு அணி. நாங்கள் மீண்டும் திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

