தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து இன்னொரு இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் இடத்தில் வருகிறார். தற்போது அவர் மூன்று போட்டிகளில் மொத்தம் 105 ரன்கள் மட்டுமே 120 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இவருடைய பேட்டிங் வழக்கத்தை விடவும் மிகவும் மெதுவாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசி உள்ள இர்பான் பதான் கூறும்பொழுது “முதலில் இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு முனையில் இஷான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திலக் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார். இருந்தாலும் அடுத்து அகமதாபாத் போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரால் அங்கும் அதிரடியாக விளையாட முடியவில்லை. அவருடைய பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்து வருகிறது”
“மேலும் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேன்கள் வருகின்ற காரணத்தினால், எதிரணியின் பகுதிநேர ஆப் ஸ்பின்னர் பவர் பிளேவில் பந்து வீச வருகிறார். பாகிஸ்தான் போட்டியில் சல்மான் அலி ஆகா நெதர்லாந்து போட்டியில் ஆரியன் தத் என்று வந்தார்கள். நாளை இரண்டாவது சுற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் எய்டன் மார்க்ரம் பந்து வீச வரலாம். எனவே இதை மாற்ற ஒரு வலதுகை பேட்ஸ்மேன் மூன்றாவது இடத்தில் வேண்டும். எனவே சூரியகுமார் யாதவை கொண்டு வரலாம். மேலும் நாம் இந்த மாற்றங்களை செய்யாவிட்டால் எதிரணிகள் திட்டம் தீட்டுவது எளிதாகி விடுகிறது. இது நாக் அவுட் போட்டியில் நம்மை தோற்கவும் வைக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

