இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா காய்ச்சல் காரணமாக களம் இறங்கவில்லை. அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் அபிஷேக் ஷர்மா அடுத்த ஒன்று அல்லது இரண்டு போட்டிக்கு வெளியில் அமர வேண்டியது இருக்கலாம் என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். இது அவருக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதமாக அமைந்திருக்கிறது. மேலும் இதுவரையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அரைசதம் அடித்தது கிடையாது. இஷான் கிஷான் இந்த அரைசதத்தின் மூலமாக டி20 உலகக் கோப்பையில் அரை சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வந்த வீரர்களில் மற்ற யாரும் பெரிய அளவில் விளையாடவில்லை. இதுவரை ஐந்தாவது இடத்தில் வந்த ஹர்திக் பாண்டியா மட்டும் தாக்குப்பிடித்து அதிரடியாக சிறப்பாக விளையாடினார். அவர் மொத்தம் 28 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. நமிபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

