இன்று டி20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணி மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வென்று அடுத்த சுற்றுக்குள் ஏறக்குறைய ஆஸ்திரேலிய அணி நுழைந்து விடும் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஜிம்பாப்வே அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது சுற்று வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரைன் பென்னெட் 56 பந்துகளில் 64, மருமாணி 21 பந்துகளில் 35 ரன்கள், கேப்டன் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்கள். விக்கெட்டை கைவசம் வைத்து சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ஹெட் 17, ஜோஸ் இங்கிலீஷ் 8 என சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். சரிவிலிருந்து மீட்க போராடிய மேக்ஸ்வெல் 31, மேத்யூ ரன்சா 64 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் ஆஸ்திரேலியா அணியை 19.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு முறை விளையாடி இரண்டு போட்டிகளையும் ஜிம்பாப்வே அணி வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

