இன்று இந்தியா ஜிம்பாப்வே அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி செமி பைனலுக்கு தகுதி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியை சொந்த மண்ணில் சந்திக்கின்ற காரணத்தினால் ஜிம்பாப்வே அணிக்கு நிறைய அழுத்தம் இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த ஜிம்பாப்வே கேப்டன் சில விஷயம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி முதல் சுற்றில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை என இரண்டு பெரிய அணிகளை வீழ்த்தி தோல்வி அடையாமல் இரண்டாவது சுற்று வந்தது. ஆனால் இரண்டாவது சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 250க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்து படுதோல்வி அடைந்தது. இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சிக்கந்தர் ராஸா ” இங்கு இருக்கக்கூடியவர்களில் எத்தனை பேர் நாங்கள் செமி பைனலுக்கு செல்வோம் என்று கையை உயர்த்துங்கள் என்று கேட்டேன். ஒரே ஒருவர் மட்டுமே கையை உயர்த்தினார். நாங்கள் இன்னும் உங்களது நம்பிக்கையையும் மரியாதையையும் சம்பாதிக்கும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்பதை இது காட்டுகிறது. நாளை இதே கேள்வியை கேட்கும் பொழுது பலரும் கையை உயர்த்தும் சூழ்நிலை ஒரு நாள் வரும். அந்த அளவுக்கு நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அது ஒரு நாள் நடக்கப்போகிறது; அதைப் பார்ப்பதுதான் என் ஆசை” என்று கூறியிருக்கிறார்.

