344 ரன்கள்.. 27 சிக்சர்கள்.. இந்தியா அணியின் சாதனை முறியடிப்பு.. ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை

2026 ஆம் வருட டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியிலும் 20 நாடுகள் பங்கு பெற உள்ளன. உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெறுவதற்கு ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்று சப்ரிஜனல் போட்டிகள் கென்யா நாட்டில் உள்ள ஜிம்கானா கிரிக்கெட் கிளப் மற்றும் ரௌக்ரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்த ஜிம்பாவே அணி உட்பட 6 அணிகள் இந்த போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி பல உலக சாதனைகளை படைத்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 8 புள்ளிகள் உடன் முதலிடத்திலும் உள்ளது. முன்னதாக இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் துவக்க வீரர்களான மருமணி மற்றும் பிரைன் பென்னெட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தனர். மருமணி 19 பந்துகளில் 62 ரன்களும் பெண்ணட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க நான்காவதாக களம் இறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் 33 பந்துகளில் தனது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு பக்கபலமாக விளையாடிய மடான்டே 16 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இவர்கள் இருவரது அதிரடியின் காரணமாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 344 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் படைத்தது. இந்தப் போட்டியில் 43 பந்துகளை சந்தித்த சிக்கந்தர் ராஜா 133 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும் 15 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் ஜிம்பாவே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அவருக்கு துணையாக விளையாடிய மடான்டே 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார். இந்தப் போட்டியில் கம்பியா அணியின் வீரர் மூசா ஜோபர்ட்த் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் எதுவும் கைப்பற்றாமல் 93 ரன்கள் வழங்கினார். டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். மேலும் ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் 27 சிக்ஸர்களும் 30 பவுண்டரிகளும் விலாசியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 344 ரன்கள் குவித்து இருப்பதன் மூலம் நேபால் மற்றும் இந்திய அணியின் சாதனைகளையும் ஜிம்பாவே முறியடித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 297 ரன்கள் குவித்தது. தற்போது ஜிம்பாப்வே 344 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய காம்பியா அணி 14.4 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் வீரர் அண்ட் ரே ஜார்ஜ் மட்டும் இரட்டை இலக்கங்களில் ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதிகபட்சமாக 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் ஜிம்பாவே படைத்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles