இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக திகழ்ந்த யுவராஜ் சிங் 2007 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பைகளில் இந்திய அணி கோப்பைகளை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் பிரச்சனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிய சறுக்கலை உண்டாக்கியது. இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து சிறந்த ஆள்ரவுண்டராய் சிறிது காலம் இந்திய அணியில் விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த யுவராஜ் சிங், எனது புற்றுநோய் காலத்தில் நான் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே வாழ வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறியது எனக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது எனவும் அதற்குப் பிறகு தான் அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும் யுவராஜ் சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனது நுரையீரல் மற்றும் இதயத்திற்கு இடையே இருந்த கட்டி என் நரம்பு மண்டலத்தை அழுத்திக் கொண்டிருந்தது. எனவே இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் நான் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வேன் என்று டாக்டர்கள் எனக்கு கூறினார்கள். அப்போது நான் இறக்கப் போகிறோம் என்கிற எண்ணம் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. ஆனால் உலகம் முடியாது என்று சொன்னதை சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற வைராக்கியமே என்னை மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் கொண்டு வந்தது” என்ற யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

