இந்திய அணியின் அதிரடி இடதுகை துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா குறித்து சமூக வலைத்தளத்தில் யுவராஜ் சிங் கடுமையாக கமென்ட் செய்துள்ளார்.
போட்டியின் முதல் பந்து முதலே அதிரடியாக ஆடுவது தான் அபிஷேக் ஷர்மாவின் வழக்கம். அவரும் டிராவிஸ் ஹெட்டும் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இணைந்து எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் ஷர்மா ஒரு போட்டியில் அதிகபட்சம் 30 பந்துகளுக்கு மேல் ஆடவில்லை. அதிலேயே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 400+ ரன்களைக் குவித்தார்.
உடனே அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. ஜிம்பாப்வே டி20ஐ தொடரில் 2வது போட்டியிலேயே அதிரடியான சதத்தைப் பதிவு செய்தார். தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20ஐ தொடரிலும் விளையாடி வருகிறார். ஜெய்ஸ்வால், கில், ருத்துராஜ், கிஷான் உள்ளிட்ட வீரர்கள் என கடும் போட்டி நிலவும் சூழலில் மறுபடியும் அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் 7 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸ் என 17 ரன்கள் சேர்த்த போது துரதிஸ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் அபிஷேக் ஷர்மா. போட்டி முடிந்த பிறகு தன் இன்ஸ்டாகிராமில், ” ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரண்ணும் அணிக்காகவே. சீரிஸ்க்கு அருமையான துவக்கம். ” எனப் போஸ்ட் போட்டு இருந்தார்.
அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், விரைவில் பெரிய ஸ்கோர் வரும் எனத் தோன்றுகிறது. ” எனக் கமென்ட் செய்து இருந்தார். அதற்கு யுவராஜ் சிங் உடனே, ” மூளையைப் பயன்படுத்தினால் மட்டுமே. ” எனக் கடுமையான ரிப்ளை செய்தார். அபிஷேக் ஷர்மா சற்றும் பொறுமையைக் கடைப் பிடிக்காமல் ஆடுவது, நேற்று ரன் அவுட் ஆனதைக் குறிப்பிட்டு யுவராஜ் அவ்வாறு கமென்ட் செய்துள்ளார்.
திறமையான வீரரான அபிஷேக் ஷர்மாவின் மேல் அக்கறைக் கொண்டு ஒரு வழிகாட்டியாக அவர் பொறுப்புடன் விளையாடி மேலும் உயர வேண்டுமென யுவராஜ் விரும்புகிறார். அபிஷேக் ஷர்மா அணியின் நலன் கருதி பவர்ப்ளேவில் அனைத்துப் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவார். ஹைதராபாத் அணியைத் தொடர்ந்து இந்திய அணியிலும் அவர் இதையே தான் செய்கிறார்.

