நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டது. அதில், தனது மதிப்புமிக்க முதல் இடத்தை இந்திய அணி தவறவிட்டது.
பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேசிய ஆஸ்திரேலியா வீரரான ஹேசில்வுட், “நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தோல்வியில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் அனுபவத்தின் காரணமாக மீண்டெழுந்து வரலாம். இந்தத் தோல்வியானது, ஒரு மிகப்பெரிய அரக்கனை தூக்கத்தில் இருந்து எழுப்பி இருக்கும் என்று கூறியிருந்தார்.”
அரக்கனை எழுப்பி விட்டார்கள்:
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ODI தொடரின் போது, சிட்னி மார்னிங் ஹெரால் என்ற பத்திரிக்கை ஒன்றிடம் ஆஸ்திரேலியா வீரரான ஹேசில்வுட் கூறியதாவது, “ இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதை விட 3-0 என்ற கணக்கில் தோல்வி பெறுவதே நல்லது. ஏனென்றால், இப்பொழுது அவர்களின் மன நம்பிக்கை சிறிது பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர்களின் அனுபவத்தின் காரணமாக அவர்கள் மீண்டெழுந்து வரலாம். இந்தத் தோல்வியானது தூக்கத்திலிருந்து ஒரு மிகப்பெரிய அரக்கனை எழுப்பி விட்டதற்கு சமம். சரி, அதைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டாம்”.
எல்லா புகழும் கிவி நண்பர்களுக்கே:
மேலும் அவர் கூறியதாவது, “நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்தது எங்களுக்கு ஒரு நல்ல முடிவாகவே அமைந்தது. எல்லா புகழும் கிவி (நியூசிலாந்து) நண்பர்களுக்கே சேரும். அவர்கள் மிகவும் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரே வெல்வதே கடினமாகும். ஆனால், அவர்கள் 3-0 என்ற கணக்கில் வென்றது மிகவும் ஆச்சரியமானது” என்று கூறி முடித்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதனை தன் கருத்தில் கொண்டே அவர் இப்படி கூறி இருக்கலாம்.

