கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் ஒரு புராணமாகவே திகழ்கிறது. அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் தற்போது தனது சொந்த பாதையை உருவாக்கி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த இரு சீசனில் ஐ.பி.எலில் மும்பை அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர், பெரிதாக தாக்கத்தை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
அர்ஜுன் டெண்டுல்கரின் திறன் பற்றியும், அவரை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்பது பற்றியும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பேசியுள்ளார். யோக்ராஜ் சிங், இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து, அவர்களை மெருகேற்றுவதில் பெயர் பெற்றவர். தனது சொந்த அகாடமியை நடத்தி, நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களை வளர்த்து வருகிறார். அவர் கடினமான பயிற்சியாளராக அறியப்படுகிறார்.
இந்தப் பின்னணியில், அவர் அர்ஜுன் டெண்டுல்கரைப் பற்றி பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. அர்ஜுன் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உலகின் மிகச்சிறந்த வீரராக மாறும் திறன் பெற்றவர் என்று கூறினார். அவரை ஒரு பவுலராக மாற்ற முயல்வது, அவரது திறமையை வீணடிப்பதாகத் தெரிவதாக சொன்னார். மேலும், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராகவே அர்ஜுன் டெண்டுல்கரை யோக்ராஜ் சிங் பார்க்கிறார்.
அவர் கூறியதாவது, “ அர்ஜுன் டெண்டுல்கர் என்னிடம் வந்தால், ஆறு மாதங்களில் அவனை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக மாற்றுவேன். சச்சினும் யுவராஜும் என்னிடம் அர்ஜுனைப் பயிற்றுவிக்கச் சொன்னார்கள். அவன் என்னுடன் 10-12 நாட்கள் இருந்தான். அப்போது ரஞ்சித் தொடரில் கோவா அணிக்காக சதம் விளாசினார் அர்ஜுன் டெண்டுல்கர். இவ்வளவு திறன் கொண்ட பேட்ஸ்மேனை ஏன் பந்து வீச்சாளராக மாற்றுகிறார்கள் என்ற குழப்பம் எனக்கு இருக்கிறது. ” என்று யோக்ராஜ் உறுதியாகக் கூறினார்.

