இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
காயம் அடைந்த ஜெய்ஸ்வால்
தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் கூட்டணி களத்தில் இணைந்தது. 2வது செஷனை அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பின் எந்தவொரு பவுலருக்கும் கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத அவர், அனைவரையும் அட்டாக் செய்தார்.
இதனால் அடுத்த சில நேரங்களில் 80 ரன்களி கடந்தார். அப்போது அவருக்கு பிடிப்பு ஏற்பட, பலரும் வர்ணனையில் ஜெய்ஸ்வால் ஓய்வறை திரும்புவது நல்லது என்று கூறி வந்தனர். ஆனால் ஜெய்ஸ்வாலோ, கிராம்பை கட்டுப்படுத்தி அதிரடியாக பவுண்டரியை விளாசி, 144 பந்துகளில் ஒரு சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 100 ரன்களை விளாசி அசத்தினார்.
ஜெய்ஸ்வால் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 5வது சதம் இதுவாகும். அதேபோல் வெளிநாடுகளில் ஜெய்ஸ்வாலின் 3வது சதம் இது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவில் சதம் விளாசியுள்ள ஜெய்ஸ்வால், தற்போது இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலமாக இங்கிலாந்து மண்ணில் ஹெல்டிங்லேவில் முதல் சதம் விளாசிய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதர்கு முன்பாக 1982ல் சந்தீப் பாட்டீல், 1996ல் சவுரவ் கங்குலி, 1952ல் விஜய் மஞ்ச்ரேக்கர், 2014ல் முரளி விஜய் ஆகியோரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் ஜெய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

