இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து இருக்கிறது. மேலும் இந்தப் போட்டியில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியின் முதலில் அரை சதம் எடுத்த இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். இவர் அவுட் ஆன விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட வந்திருக்கிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறிய போது ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. மேலும் இந்தியாவின் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் அவர் ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
முதல் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய போது பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நகித் ராணா வீசிய ஷார்ட் பீட்ச் பந்தில் முதல் ஸ்லீப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இது குறித்து பேசிய அஜய் ஜடேஜா துவக்கத்தில் அவர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார். ஆட்டம் தொடங்கிய போது ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. மேலும் பந்து ஸ்விங் ஆனது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களும் தடுமாறினர். எனவே ஜெய்ஸ்வால் தடுமாறியது பெரிய விஷயம் இல்லை எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தலை உயரத்திற்கு வரும் பவுன்சர்கள் ஜெய்ஸ்வாலுக்கு பிரச்சனையாக இல்லை. உயரம் குறைவாக வயிறு அளவில் வீசப்படும் ஷார்ட் பீட்ச் பந்துகள் ஜெய்ஸ்வாலுக்கு பிரச்சனையாக இருக்கிறது. மற்ற வீரர்கள் இந்தப் பந்தினை மிகவும் எளிதாக விளையாடி விடுகிறார்கள். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது எனக் கூறினார். ஆனால் மற்ற வீரர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் ஷார்ட் பந்துகளை ஜெய் ஸ்வால் மிகத் திறமையாக விளையாடுகிறார் என தெரிவித்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முழு அளவில் வீசப்படும் பந்துகள் மற்றும் பவுன்சர்கள் பெரும்பாலான பேட்ஸ்மென்களுக்கு பிரச்சினையாக இருக்கும். ஆனால் உயரம் குறைவான பவுன்சர்களை பொதுவாகவே வீரர்கள் எளிமையாக ஆடுவார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் இதில் எதிர்மறையாக இருக்கிறார். சில நேரங்களில் நம் ஆட்டத்தில் ஒரு சில மாற்றங்களை செய்வோம். அப்போது நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும். அது போன்ற ஒரு டெக்னிக்கல் பிரச்சனைதான் ஜெய்ஸ்வாலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

