சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மார்ச் 9ம் தேதி துபாய் மண்ணில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக விராட் கோலி அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்களை விளாசி இருக்கிறார்.
இதன் காரணமாக விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் விராட் கோலி பேசும் போது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய இன்னிங்ஸ் உடன் இந்த இன்னிங்ஸ் ஒத்துப்போகும். சூழல் மற்றும் பிட்சை புரிந்து கொண்டு எப்போதும் ஆட்டத்தை கட்டமைத்து விளையாடுவேன். அதுதான் என் ஸ்டைலும் கூட. இந்த பிட்சில் ஸ்ட்ரைக் ரொடேஷன் மற்றும் பார்ட்னர்ஷிப் உருவாக்குவது முக்கியம்.
விராட் கோலி பேட்டி
அதனால் 2 இன்னிங்ஸிலும் பார்ட்னர்ஷிப் உருவாக்கியதே நான் செய்த பணி. நான் ஆட்டமிழந்த போது, கூடுதலாக 20 ரன்களை சேர்த்துவிட்டு, அடுத்த 2 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பதே திட்டம். வழக்கமான அந்த டெம்ப்ளேட்டில் விளையாடுவேன். ஆனால் நினைத்ததை சில நேரம் சரியாக செயல்படுத்த முடியாது. நான் எப்படி ஒரு இன்னிங்ஸில் விளையாட வேண்டும் என்பதை பிட்ச் மட்டுமே முடிவு செய்கிறது.
இந்த இன்னிங்ஸில் அதிரடியாக ஆட வேண்டும், ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எந்தவித எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் ஆடி இருக்கிறேன். அவசரம் காட்டவில்லை. இந்த இன்னிங்ஸில் ஓடி எடுத்த ஒரு ஒரு ரன்னும் நிம்மதியை கொடுக்கிறது. நாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கு அந்த ஒரு ரன்களே சான்றாக இருக்கிறது. அதனால் இரு இன்னிங்ஸும் சிறந்ததுதான்.
கவலை கிடையாது
நாக் அவுட் போட்டி என்பதே அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டும்தான். சிறப்பாக ஆடினால் எதிரணியே வாய்ப்பை உருவாக்கி கொடுப்பார்கள். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் அவசரம் காட்டக் கூடாது. எப்போதும் எத்தனை ஓவர்களுக்கு எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை கவனித்து கொண்டே இருப்பேன். ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்றாலும் கவலைப்பட மாட்டேன்.
6 முதல் 7 விக்கெட்டுகள் கைகளில் இருந்தால், எவ்வளவு பெரிய ரன் ரேட்டையும் எட்டிவிடலாம். சாதனைகள், சதங்கள் குறித்து எப்போதும் கண்டுகொண்டதில்லை. இந்திய அணியின் வெற்றியும், பெருமையுமே முக்கியம். சொந்த சாதனைகளை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

