இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களால் கிடைக்கும் வருவாயில், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் போதிய பங்கு கிடைப்பதில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் CEO கிறிஸ் டெஹ்ரிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், வீரர்களின் ஊதியத்தைக் குறைப்பது உள்ளிட்ட செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த வருவாய் பகிர்வு விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் மைதான வருவாய், ஒளிபரப்பு உரிமம் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் பணம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதே இந்தக் கேள்வியின் பின்னணி. சொந்த மண்ணில் தொடரை நடத்தும் கிரிக்கெட் வாரியத்துக்கும், வெளிநாட்டிலிருந்து விளையாட வரும் அணிக்கும் இடையிலான வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் தேவைப்படுகிறதா என்ற விவாதம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம் 1997-ம் ஆண்டிலிருந்து தொடங்கியதாக டெஹ்ரிங் விளக்கினார். அதற்கு முன்பு, வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் அணிகளுக்கு தொடரின் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. ஆனால், 1997-ல் கொண்டுவரப்பட்ட புதிய முறையின்படி, இருதரப்பு தொடரை நடத்தும் நாடே ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருவாயைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலை உருவானது. இதற்கு ICC உறுப்பினர்களில் 10 பேரில் 9 பேர் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நடைபெறும் ஒரு தொடர் மூலம் 20 முதல் 30 மில்லியன் டாலர் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், அதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு நேரடியாக எந்த வருவாயும் கிடைப்பதில்லை என்பதே டெஹ்ரிங்கின் முக்கியக் குற்றச்சாட்டு. இந்தியாவின் மிகப்பெரிய பார்வையாளர் சந்தை மூலம் கிடைக்கும் வருவாயையும், கரீபியன் தீவுகளில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கிடைக்கும் வருவாயையும் ஒப்பிட்ட அவர், தற்போதைய முறை வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு நியாயமற்றதாக இருப்பதாகக் கூறினார்.
இந்த நிதி நெருக்கடியின் தாக்கமாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஒப்பந்த ஊதியத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுக்கான Super50 மற்றும் பெண்களுக்கான T20 Blaze உள்ளூர் தொடர்களும் இந்த ஆண்டுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து போட்டியிடுவதற்கும், உள்ளூர் வீரர்களை வளர்ப்பதற்கும் தேவையான நிதியைத் திரட்டுவது வெஸ்ட் இண்டீஸ் வாரியத்துக்கு இப்போது பெரும் சவாலாகியுள்ளது.

