ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சென்னை அணி தரப்பில் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கும், இளம் வீரரான சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கும், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கும், ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.
இதன் மூலமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் மொயின் அணிக்கு பேக் அப் வீரராக ரச்சின் ரவீந்திராவையும், ராயுடுவுக்கு பேக் அப் வீரராக டேரல் மிட்செல் மற்றும் சமீர் ரிஸ்வியையும் வாங்கியது தெரிய வந்தது. அதேபோல் பதிரானா இல்லையென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் நிச்சயம் முஷ்டாஃபிகுர் ரஹ்மானின் பந்துகளை எதிர்கொள்வதில் மிகப்பெரிய சவால் என்பதை அறிந்து சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது.
மினி ஏலத்தின் போது ரிஷப் பண்ட் உடன் இணைந்து தோனியும் துபாயில் தான் இருந்தார். கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் தோனி, அடுத்தடுத்து காயம் வேகமாக குணமடைவதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னையில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியின் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசிய போது, தோனிக்கு இதுதான் கடைசி சீசனா என்பதை தோனியிடம் தான் கேட்க வேண்டும். அதனை அவரே அறிவிப்பார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார். முடிவை எடுத்த பின் எங்களிடம் கூற மாட்டார்.
அதனால் தோனி தான் அதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் தோனி ஏற்கனவே ஜிம்மில் பயிற்சியை தொடங்கிவிட்டார். ஜனவரி முதல் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடக்கும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப தான் சிஎஸ்கே அணி கட்டமைக்கப்பட்டு தயாராகி வருகிறது. மார்ச் 22ஆஅம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் 3 வாரங்கள் பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது. அப்படிதான் திட்டமிட்டுள்ளோம். ஏலத்தை பொறுத்தவரை சிஎஸ்கே அணிக்கு மிகச்சிறந்த வீரர்கள் வாங்கப்பட்டனர்.
எங்களின் குறி ராயுடுவுக்கான மாற்று வீரரை எடுப்பதாக தான் இருந்தது. அதனால் டேரல் மிட்செல் மற்றும் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் இருவரையும் தான் வாங்க முடிவு செய்திருந்தோம். ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் முஷ்டாஃபிகுர் ரஹ்மனின் பந்துகளில் சிறப்பாக எடுபடும். அவர்கள் இருவருமே வாங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

