இந்திய அணிக்கு 2 உலகக் கோப்பைகளை வென்று தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த 2020 ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் போட்டி தொடர்களில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் வீரராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி விளையாடுவாரா.? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடனான தனது உறவு பற்றி மனம் திறந்து இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விராட் கோலி உடன் தனக்கிருந்த நட்பு பற்றி மனம் திறந்து உள்ளார். இது தொடர்பாக பேசிய தோனி நாங்கள் இருவரும் இந்தியாவிற்காக பல ஆண்டுகள் இணைந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். சர்வதேச அளவில் எப்போதும் விராட் கோலி மிகச் சிறந்த வீரர். மேலும் அவருடன் இணைந்து மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் நாங்கள் இருவரும் 2 மற்றும் 3 ரன்களை அடிக்கடி ஓடியெடுப்போம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய தோனி “நானும் விராட் கோலியும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. ஐபிஎல் போட்டிகளின் போது அல்லது ஏதேனும் விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். அப்படி எங்கள் சந்திப்பு நிகழ்ந்தால் நாங்கள் இருவரும் அதிக நேரம் உரையாடுவோம். என்ன நடந்து கொண்டிருக்கிறது.? வாழ்க்கை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது.? என்பது குறித்து விவாதிப்போம். இது போன்ற ஒரு ஆத்மார்த்தமான நட்பு எங்களிடம் இருக்கிறது. இதுதான் எனக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு” என அவர் தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது கிரிக்கெட் உலகம் அறிந்ததே. மகேந்திர சிங் தோனியுடன் தனக்கு இருக்கும் நட்பு பற்றி விராட் கோலி முன்பே குறிப்பிட்டு இருந்தார். தன்னுடைய கடினமான காலங்களில் மகேந்திர சிங் தோனி எவ்வாறு தனக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறித்தும் விராட் கோலி கூறியிருந்தார். மேலும் தன்னுடைய கடினமான காலங்களில் தனக்கு ஆதரவாக இருந்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி தான் எனவும் விராட் கோலி குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த 2021-22 காலகட்டங்களில் விராட் கோலி தனது பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தடுமாறினார். மேலும் அந்தக் காலகட்டத்தில் டி20 கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இது போன்ற நெருக்கடியான ஒரு சூழலில் மகேந்திர சிங் தோனி மட்டும்தான் தன்னை அழைத்து நடந்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து தனக்கு ஆதரவாக இருந்தார் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.

