சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு முதல் போட்டி தோல்வியில் அமைந்தாலும், இரண்டாவது போட்டியில் வீறு கொண்டு எழுந்து அந்தப் போட்டியை வெற்றியில் முடித்து தொடரை சமனில் முடித்தது.
இந்திய அணி சமீப காலங்களில் இரு தரப்பு தொடர்களைத் தவிர ஐசிசி தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்றதில்லை. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்தது. இதற்கு முன்னர் நடந்த டி20 உலக கோப்பைத் தொடரிலும் அறையறுதியில் இங்கிலாந்து அணியிடம் அடி வாங்கியது.
2011ல் எம் எஸ் தோனியின் தலைமையின் கீழ் உலகக் கோப்பை வென்ற பிறகு இந்திய அணி ஐசிசி தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற முடிவதில்லை. வெளிநாடுகளில் பெரிய ஐசிசி தொடர்கள் நடைபெறுவதால் அங்குள்ள சீதோஷ்ண நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வீரர்களால் தங்களை மாற்றிக் கொள்ள இயலவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இவை அனைத்தையும் மாற்றும் வகையில் இந்திய அணிக்கு தற்போது நடந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அரையிறுதி வரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமலே சரண் அடைந்தது. குஜராத் ஆடுகளத்தின் சீதோசன நிலை மற்றும் மக்கள் செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் இந்திய அணி தோல்வியையே தழுவியது.
அப்போட்டியில் விராட் கோலி கே.எல் ராகுல், சமி ஆகியோரை தவிர மற்ற வீரர்களால் பெரிய பங்களிப்பை வழங்க முடியவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மத்தியில் நடந்த உரையாடலில் இந்திய அணி கணிசமான திறமைகள் மற்றும் வளங்களைக் கொண்டிருந்தாலும் அவர்களின் திறமைக்கு ஏற்ப வெற்றிகளை பெறவில்லை.
அவர்களின் தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை. அவர்கள் கடைசியாக எந்தப் போட்டியை வென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம் உள்ள திறமைக்கு இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும் என்று இந்திய அணியைத் தர குறைவாகப் பேசி இருக்கிறார். மைக்கேல் வாகனின் இந்த கருத்துக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்
“சமீப காலங்களில் இந்திய அணி இருதரப்புத் தொடர்களை தவிர பெரிய ஐசிசி தொடர்களில் வென்றதில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் டெஸ்ட் அணிகளில் இந்திய அணி தற்போது சிறந்த அணியாக உள்ளது. டெஸ்டில் குறிப்பிடத்தக்க சிறந்த வெற்றிகளை நாங்கள் பெற்றுள்ளோம். தற்போது விளையாட்டின் சிறந்த ஆற்றல் மையமாக நாங்கள் உள்ளோம்” என்று கூறி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

