டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தாலும் அதன் காய்ச்சல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதை இந்திய அணி வென்றிருப்பது தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றிவிழாவில் விராட் கோலி இவரை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்கலாம் என்றும், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய மகத்தான வீரர் என்றும் பாராட்டி பேசி உள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பேட்டிங்கை மட்டும் நம்பி செல்லாமல் பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னணி அணியாக விளங்கியது. ஏனென்றால் பேட்டிங்கை மட்டுமே நம்பி சென்றால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அது சுத்தமாக எடுபடாது. அதனால்தான் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா சரியான கலவையில் அணியை வடிவமைத்தார்.
இதில் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கிய பும்ரா எப்போதெல்லாம் அணி சிக்கலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் கேப்டனிடம் பந்தை பெற்று எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேனை வீழ்த்தி விடுகிறார். பந்துவீச்சில் எப்போதெல்லாம் இந்திய அணி சிக்கல் இருக்கிறதோ அப்போதெல்லாம் ரோகித் சர்மாவிற்கு கிடைக்கும் ஒரே ஆயுதம் பும்ரா மட்டுமே ஆகும். அர்ஜுனனின் கையில் கிடைத்திருக்கும் வில் போல கடைசி பிரம்மாஸ்திரத்தை எய்தி அதற்கான பலனையும் அனுபவித்து விடுவார்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இவரது பந்துவீச்சு மிக அபாரமான ஒன்றாகும். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் விராட் கோலியிடம் பும்ராவை உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்கலாமா? அதற்கு நீங்கள் கையெழுத்து போடுவீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு விராட் கோலி பதில் தெரிவிக்கும் வகையில் “உலகின் எட்டாவது அதிசயமாக பும்ராவை அறிவித்தால் நான் நிச்சயமாக கையெழுத்து போடுவேன். இவர் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பார்கள். நான் நிஜமாகவே இறுதிப்போட்டியில் நாம் தோற்று விடுவோமோ? என்ற அச்சமடைந்தேன். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் பும்ரா வீசிய இரண்டு ஓவர் போட்டியை முற்றிலுமாக மாற்றி அமைத்தது” என்று விராட் கோலி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:உலக கோப்பை ஜெயிச்சது ஓகே.. ஆனா ஏன் அப்படி வித்தியாசமா நடந்து போய் வாங்கினீங்க.. பிரதமரிடம் விளக்கிய கேப்டன் ரோஹித்
இது குறித்து கூறிய பும்ரா ” கிரிக்கெட் தொடரில் எனது பயணம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. நான் இன்னமும் இந்திய அணிக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்திய அணி உண்மையிலேயே சிறந்தது. வீரர்கள் தங்களது வேலையை அறிந்து அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது” என்று கூறி இருக்கிறார்

