ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரஞ்சி டிராபி போட்டியில் ஆடினார். அவரின் ஆட்டத்தை காண்பதற்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் விராட் கோலியின் ஃபார்ம் மீது கேள்விகள் வந்தது.
ஃபார்மில் இல்லாத விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் விராட் கோலியால் ஃபார்முக்கு வர முடியுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. கடைசி நேரத்தில் முட்டியில் காயம் ஏற்பட்டதால், களமிறங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கினார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எப்படியும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 304 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது.
விராட் கோலி ஏமாற்றம்
இதன்பின் 305 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 136 ரன்களை விளாசிய நிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்களை எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன்பின் ரோஹித் சர்மா – விராட் கோலி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நீண்ட நாட்களுக்கு பின் இருவரும் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்ததால் ரசிகர்களின் கரகோஷம் உச்சத்தில் இருந்தது. ரோஹித் சர்மா தனது ஸ்டைலில் ரன்களை சேர்க்க, விராட் கோலி களமிறங்கி கிளாசிக் ஸ்ட்ரைட் டிரைவ் மூலமாக கணக்கை தொடங்கினார். ஆனால் ஆடில் ரஷீத் வீசிய பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த போட்டியில் விராட் கோலி 94 ரன்கள் அடித்திருந்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். தற்போது விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்ததால், 13,911 ரன்களுடன் இருக்கிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவே இந்த 14 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை விராட் கோலி படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

