ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது.
இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இந்த சூழலில் மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய 19 வயது அறிமுகவீரர் ஷாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
இவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். வெறும் 52 பந்துகளில் அரை சதம் கடந்த சாம் கோன்ஸ்டாஸ் பும்ராவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அசத்தினார். இந்த நிலையில் தான் ஓவருக்கு நடுவே விராட் கோலி வேண்டுமென்று சாம் கோன்ஸ்டாஸ் மீது நடந்து வந்து மோதியதாக சர்ச்சை எழுந்தது.
19 வயது வீரருடன் விராட் கோலி இப்படி நடந்து கொள்ளலாமா என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், கோலி இதனை தவிர்த்து இருக்கலாம் என்று அறிவுரை வழங்கியிருந்தார். இந்த சூழலில் ஒரு வீரர் மற்றொரு வீரருடன் மோதினால் அவர்களுக்கு ஒரு போட்டியில் தடை கூட விதிக்கப்படலாம். இப்படி தான் கடந்த 2008 ஆம் ஆண்டு வாட்சன் உடன் மோதிய விவகாரத்தில் தற்போதைய பயிற்சியாளர் கம்பீர்க்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் கோலிக்கும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ள ஐசிசி போட்டி ஊதியத்திலிருந்து விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விராட் கோலிக்கு மைனஸ் ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதியின் படி 24 மாதத்திற்குள் ஒரு வீரர் 3 அல்லது 4 புள்ளிகளை பெற்றால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். ஆனால் விராட் கோலி தற்போது தான் முதல் புள்ளி பெற்றிருப்பதால் கோலி தடையிலிருந்து தப்பித்து இருக்கிறார். இதனால் விராட் கோலி சிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதனிடையே ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலி மற்றும் மற்ற இந்திய வீரர்கள் மீது மைதானத்தில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல்களை செய்ததால் தான் விராட் கோலி கடுப்பில் இந்த மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

