சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஆயுஷ் மாத்ரே. 7 போட்டிகளில் விளையாடிய ஆயுஷ் மாத்ரே, மொத்தமாக 240 ரன்கள் விளாசி தள்ளினார். ஆர்சிபி அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது. இதனால் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் தயார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுஷ் மாத்ரே பிறந்தநாள்
அதுமட்டுமல்லாமல் இந்திய யு19 அணியின் கேப்டனாகவும் ஆயுஷ் மாத்ரே நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலமாக இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணியை சிறப்பாக வழிநடத்தி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இதனால் ஆயுஷ் மாத்ரேவின் பெயர் இப்போதே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதேபோல் ஆயுஷ் மாத்ரேவுக்கு நிகராக வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசியதோடு, இங்கிலாந்து மண்ணிலும் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவரை பார்ப்பதற்காக பலரும் மைதானத்திற்கு வந்து யு19 போட்டிகளை பார்த்து வருகின்றனர்.
ஜாம்பவான்
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி – ஆயுஷ் மாத்ரே இருவரும் களமிறங்கி விளாசி கட்டி வருகின்றனர். தற்போது ஆயுஷ் மாத்ரே தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்காக வைபவ் சூர்யவன்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹேப்பி பர்த்டே லெஜண்ட் என்று பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
18 வயதிலேயே ஆயுஷ் மாத்ரே லெஜண்ட் என்று வைபவ் சூர்யவன்ஷி பாராட்டி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விரைவில் இந்திய டி20 அணிக்குள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் அறிமுகம் செய்யப்பட்டு, இணைந்து களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

