ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி பலரையும் கவர்ந்தார். 35 பந்துகளில் குஜராத் அணிக்கு எதிராக சதம் விளாசிய அவர், ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த 2வது வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் படைத்தார். 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே இந்திய யு19 அணிக்காக விளையாடி வந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி சம்பவம்
இந்த சூழலில் இந்திய யு19 அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து யு19 அணி 43 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் கனிஷ்க் செளஹான், முகமது இனான் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர்.
இதன்பின் இந்திய யு19 அணி வைபவ் சூர்யவன்ஷி – ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தினர். இதன் காரணமாக 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 48 ரன்களை விளாசி தள்ளினார்.
இந்தியா வெற்றி
அதில் 6வது ஓவரை வீசிய ஜேக் ஹோம் பவுலிங்கில் மட்டும் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வெளியேறிய பின், துணைக் கேப்டன் அபிகியான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலமாக இந்திய அணி 24 ஓவர்களில் வெற்றியை பெற்றது.
சிறு வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் விளையாடி வைபவ் சூர்யவன்ஷி அனுபவத்தை பெறுவது அவருக்கு மிகச்சிறப்பாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் மட்டுமல்லாமல் இந்திய சீனியர் டி20 அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவருக்காக ஐசிசி விதிகள் மாற்றப்படலாம் என்ற விவாதமும் தொடங்கி நடந்து வருகிறது.

