சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஓய்வை அறிவித்துவிட்டனர். இதன்படி இந்திய அணியின் சீனியர் வீரராக ஜடேஜா மட்டுமே விளையாடி வருகிறார். இவரும் ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.
வாழ்த்திய பும்ரா, சிராஜ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் ஜடேஜா, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரியளவில் பங்களிப்பு செய்யவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பந்தை வேகமாக வீசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக ஜடேஜாவை சமாளித்தனர்.
இந்த நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியின் முதலாமாண்டு கொண்டாட்டம் இந்திய அணியில் நடைபெற்றது. அப்போது இந்திய அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய போது, ஜடேஜாவுக்கும் ஊட்டி விட்டு கொண்டாடி இருக்கின்றனர். அந்த நேரத்தில் பும்ரா, சிராஜ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர், ஹேப்பி ரிட்டையர்மெண்ட் என்று வாழ்த்தி இருக்கின்றனர்.
பதறிய ஜடேஜா
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜடேஜா, ஐயயோ.. டி20 கிரிக்கெட்டில் இருந்து மட்டும்தான் ஓய்வு பெற்றுள்ளேன் என்று பதறியடித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், ஜடேஜாவும் விலகி கொள்வது சரியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்திய அணி புதிய ஸ்பின் கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கேற்ப குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஜடேஜா தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க முடியாத நிலையில் இந்திய அணி இருக்கிறது.

